முன்னாள் ஜனாதிபதியும், பிரபல விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்து 27-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு, 24-ந் தேதி, ‘கிரீன் கலாம்’ என்று அவர் பெயரில் நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் மரக்கன்று நடத் தொடங்கியுள்ள அமைப்பு சார்பில் சென்னையில் அமைதி பேரணி நடக்கிறது.
இந்த ஆண்டு முதல், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் மரக்கன்றுகளை நட்டு வருவதுடன், புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவும் நடிகர் விவேக் திட்டமிட்டுள்ளார். சென்னையில் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நடைபெறும் இந்த பேரணியில் ஆயிரம் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் அரோரா கொடியசைத்து பேரணியை தொடங்கிவைக்கிறார். அமைதி பேரணி முடிந்ததும், ராணி மேரி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் நடிகர் விவேக் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது, பேரணியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அவர் பரிசாக வழங்குகிறார்.
இது குறித்து, நடிகர் விவேக் நிருபரிடம் கூறியதாவது:-
2010-ம் ஆண்டு டாக்டர் அப்துல்கலாம் அய்யா என்னை அழைத்து மரக்கன்றுகளை நடக் கூறினார். இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். 10 லட்சமாவது மரக்கன்றை அப்துல்கலாம் அய்யாவே கடலூரில் நட்டு சிறப்பித்தார். அப்போது அவர் என்னிடம் ஒரு கோடி மரக்கன்று நடுவதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒரு கோடி இலக்கை மனதில் கொண்டு, இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஒரு கோடி மரக்கன்று இலக்கே எனது லட்சியம். அதற்கு ‘கிரீன் கலாம்’ அமைப்பு முழு அர்ப்பணிப்போடு செயல்படும்.
இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே நடப்பட்டுள்ளது. அதை அந்தந்த பள்ளி, கல்லூரி மாணவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.
இனி நடவுள்ள மரக்கன்றுகளை பொதுமக்கள் நடமாடும் இடங்களிலும், ஊர்ப்புறங்களிலும் நட ஆசையாக உள்ளது. அதற்காக பொதுமக்கள், தொழிலதிபர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன்.
இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.
EmoticonEmoticon