நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்



தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். தற்போது இந்த நிர்வாகத்தின் மீது முதல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சங்கய்யா என்பவர் நீக்கப்பட்டார். அவர் சென்னை 11வது சிட்டி சிவில் கோர்ட்டில் தனது நீக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராகவும் துணை நடிகர்கள் ஏஜெண்டாகவும் இருக்கிறேன். நடிகர் சங்க உறுப்பினராக உள்ள பலரும் துணை நடிகர்கள் ஏஜெண்டாக உள்ளனர். புதிய நிர்வாகம் வந்த பிறகு துணை நடிகர்கள் ஏஜெண்டுகளுக்கு சில புதிய விதிமுறைகளை உருவாக்கினார்கள். அந்த விதிமுறைகளை நான் விமர்சனம் செய்தேன் என்பதற்காக என்னை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டனர். என்மீது அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. எனவே எனது நீக்கத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


EmoticonEmoticon