
டைரக்டரும், நடிகருமான பார்த்திபன் தனது படங்களுக்கு பெயர் சூட்டுவதை தனி கலையாக வைத்து இருக்கிறார். அவர் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக டைரக்டு செய்த படம், ‘புதிய பாதை.’ இதையடுத்து அவர் டைரக்டு செய்த படங்களுக்கு ‘பொண்டாட்டி தேவை,’ ‘சுகமான சுமைகள்,’ ‘உள்ளே வெளியே,’ ‘சரிகமபதநி,’ ‘ஹவுஸ்புல்,’ ‘இவன்,’ ‘குடைக்குள் மழை,’ ‘பச்சை குதிரை,’ ‘வித்தகன்’ என பெயர்களை சூட்டியதில் புதுமையை கையாண்டார்.
இதற்கு முன்பு அவர் டைரக்ஷனில் வெளிவந்த படத்துக்கு, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்று பெயர் சூட்டியிருந்தார்.
இதையடுத்து பார்த்திபன் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த படம் தொடர்பாக அவர் ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
“கோடிட்ட இடங்களை நிரப்புக” என்று ஒரு பெண்ணின் உதடுகள் சொல்வது போல் அந்த படம் அமைந்து இருக்கிறது.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் தொடர்பாக, நிருபரிடம் பார்த்திபன் கூறியதாவது:-
“இது, இளைஞர்களுக்கான படம். இந்த படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். கதாநாயகன்-கதாநாயகியாக வேறு நடிகர்-நடிகை நடிப்பார்கள். அவர்கள் இருவரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சத்யா இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முழுக்க முழுக்க திறமையை நம்பி எடுக்கிற படம், இது.”
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
EmoticonEmoticon