வரும் ஜுலை 22-ந் தேதி வெளியாகவுள்ள ‘கபாலி’ படம் வெளியாகும் நாளே
இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடும் முயற்சிகளில் சிலர் செயல்பட்டு
வருகின்றனர். இவர்களை தடுக்கும் விதமாக சமீபத்தில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மனு
ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கபாலி படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதள நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதையும் மீறி இணையதளத்தில் ‘கபாலி’ படம் வெளியானால் அந்த இணையதள சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இன்று இந்த மனு மீதான உத்தரவை பிறப்பிப்பதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று மாலை நீதிபதி உத்தரவில், கபாலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்கள் முடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ‘கபாலி’ படத்தை பேருந்துகள், கேபிள் டி.வி.களில் ஒளிபரப்பவும் தடை விதித்தார்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
‘கபாலி’ படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இப்படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், நாசர், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
EmoticonEmoticon